பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பும் துருக்கிய தூதுவருக்கு பாதுகாப்பு செயலாளர் பிரியாவிடை
டிசம்பர் 30, 2019- உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் முஸ்லிம்களுக்கு எவ்வித ஈடுபாடுகளும் இல்லை என துருக்கி தூதுவர் தெரிவிப்பு
- அனைத்து சமூகங்களும் பாதுகாபாகவும் சமமாகவும் நடத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு
தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான துருக்கி தூதுவர் துன்ஜா ஒஸ்துஹதார் இன்று (டிசம்பர் - 30) பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களைச் சந்தித்து பிரியாவிடை பெற்றுக் கொண்டார்.
துருக்கி தூதுவர் ஒஸ்துஹதார் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் குணரத்ன ஆகியோருக்கிடையே பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இரு நாடுகளினதும் பாதுகாப்பு படைகளுக்குகிடையிலான பயிற்சி வாய்ப்புக்களை அதிகரித்தல் புலனாய்வு தகவல்களை பகிர்தல் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரித்தல் உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.
கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் முஸ்லிம்களுக்கு எவ்வித ஈடுபாடுகளும் இல்லை எனவும் முஸ்லிம் சமூகம் எப்போதும் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஆதரவளித்தே வந்துள்ளதாகவும் துருக்கி தூதுவர் இந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்தார்.
கண்டி திகணவில் இரண்டு சமூகங்களுக்கு இடையில் இடம்பெற்ற சம்பவங்கள் போன்ற கசப்பான சம்பங்கள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இடம்பெற இடமளிக்கப்படமாட்டாது. நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தினரதும் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தும் என மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.
மேலும் அனைத்து மக்களும் இன மத பேதமின்றி சம உரிமைகளுடன் இலங்கையர்களாக நடத்தப்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
இஸ்லாமானது சமூகத்தினிடையே சமாதானம், ஒற்றுமையை போதிக்கும் ஒரு இனிய மார்க்கம் என தெரிவித்த மேஜர் ஜெனரல் குணரத்ன ஒரு சில தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்களின் நடவடிக்கைகள், அந்த மகத்தான மதத்தின் செயற்பாடாக இருக்க முடியாது எனவும் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் தனது பதவிக்காலத்த்தை பூர்த்தி செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள துருக்கி தூதுவர் ஆற்றிய சேவைகளுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் துருக்கி தூதுவரின் எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் மேலும் சிறப்பாக அமைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது துருக்கிய தூதரகத்தின் மூன்றாம்நிலை செயலாளர் நஸான் டெனிஸ் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.