லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரியாக நியமனம்

டிசம்பர் 31, 2019

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரியாக  நியமிக்கப்பட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.  

லெப்டினன்ட் ஜெனரல் எல் எச் எஸ் சி சில்வா டப்டப்வி ஆர்டப்பி ஆர்எஸ்பி வீஎஸ்வீ யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி, 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 23 ஆவது தளபதியாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.  இவர் இராணுவ  தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை இராணுவத்தின்  பிரதம அதிகாரியாகவும், கஜபா மற்றும் கொமாண்டோ படையணிகளின் படைத் தளபதியுமாக கடமை வகித்தார். தற்போது அவர், இராணுவ விஷேட படைப்பிரிவின் தளபதியாகவும் சேவையாற்றி வருகிறார்.  

இலங்கை இராணுவ கலாசாலையில் நிரந்தர படை அதிகாரிகளுக்கான 19வது ஆட்சேர்ப்பின்  மூலம்  1984 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 5 ஆம் திகதி இராணுவத்தில் இணைந்து கொண்டார்.   தனது  பயிற்சிகளை  நிறைவு செய்து கொண்டு 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி கெடற் அதிகாரியாக வெளியேறிய  அவர்,   கஜபா படையணியில் இணைத்து கொள்ளப்பட்டார்.   இதனை தொடர்ந்து, 1ஆவது கஜபா படையணியினது கட்டளை அதிகாரியினால்  இவர்  விஷேட சேவைக் குழுவின் கட்டளை தளபதியாக  நியமிக்கப்பட்டார்.   விஷேட சேவைக் குழுவானது பின்னர் விரைவாக செயற்படும் படையணி (RDF) என பெயர் மாற்றம் பெற்று தற்போது இது  இராணுவ விஷேட படைப்பிரிவு  என அழைக்கபடுகின்றது.  

இவர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியில் தனது psc கற்கை நெறியினை பூர்த்தி செய்தார். மேற்படி கற்கை நெறியினை பூர்த்தி செய்த அதிகாரி ஒருவர் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும். இதேவேளை இவர் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு பாதுகாப்பு கல்லூரிகளிலும் உயர் கற்கை நெறிகளை மேற்கொண்டுள்ளார்.  

லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவத்தின் பல்வேறு உயர் பதக்களை தன்னகத்தே கொண்ட உயர் அதிகாரியாவார்.  இராணுவத்தின் இரண்டாவது லெப்டிணனாக பதவி வகித்த காலத்திலேயே வீர விக்ரம விபூஷணம் (WWV), ரண விக்ரம பதக்கம் (RWP), மற்றும் ரண சூரிய பதக்கம்(RSP), ஆகிய மூன்று  சிறப்பு பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.  அத்துடன் தனது சேவைக் காலத்துக்குள்  விசிஷ்ட சேவா விபூஷணம்(VSV) , மற்றும் உத்தம சேவா பதக்கம் (USP) போன்ற உயர் பதக்கங்களையும்  பெற்றுக் கொண்டுள்ளார்.  

இவர்  2010ஆம் ஆண்டு நியூயோர்க்கில் உள்ள  ஐ. நா.வின்  தூதுவராகவும் நிரந்தர பிரதி வதிவிட பிரதிநிதியாகவும்  நியமிக்கப்பட்டார். இலங்கையின் வரலாற்றில் இலங்கையில் வெளிவிவகார சேவையில் ‘தூதுவர்’ பதவிக்கு உயர்த்தப்பட்ட ஒரே இராணுவ அதிகாரி இவராவார்.   ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகள் தொடர்பான உயர் மட்ட ஆலோசனைக் குழுவில் அப்போதைய ஐ.நா. பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட முதல் இராணுவ அதிகாரி என்பது விஷேட அம்சமாகும்.  

39 ஆண்டுகள் தாய்நாட்டிற்காக சேவையாற்றிய பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியான அட்மிரல் ரவீந்திர சி விஜேகுனரத்ன இன்று ம திகதி ஓய்வுபெற்று செல்வதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.