செனஹச நிலையத்தின் தேவைகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் விசேட கவனம்
ஜனவரி 01, 2020செனஹச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் மத்திய நிலையத்தின் பிரதிநிதிகள் குழு இன்று பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களை சந்தித்தனர்.
பாதுகாப்பு அமைச்சில் இடம் பெற்ற இந்த சந்திப்பின்போது அந்நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து பாதுகாப்புச் செயலாளருக்கு சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து இடம் பெற்ற இக்கலந்துரையாடலில் குறித்த நிறுவனம் எதிர்கொள்ளும் இடர்பாடுகள், பிரச்சினைகள் என்பவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் எதிர்காலங்களில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கை இராணுவத்தினால் நிருவகிக்கப்படும் நிறுவனங்களினல் ஒன்றான செனஹச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் மத்திய நிலையமானது முப்படை வீரர்களின் விசேட தேவையுடைய குழந்தைகளை பராமரிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். இதேவேளை இது விசேட தேவையுடைய மற்றும் குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்துவதுடன் குழந்தை வளர்ப்பு தொடர்பில் அறிவுரைகளை பெற்றுக்கொள்ளும் ஒரு தகவல் மையமாகவும் திகழ்கிறது.
கொழும்பு 5, நாரஹம்பிட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள இந் நிலையத்தில் சுமார் 3000 விசேட தேவையுடைய குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதில் இராணுவ குடும்பங்களைச் சேர்ந்த 1946 குழந்தைகளும் உள்ளடங்குகின்றன. அத்தகைய குழந்தைகளின் உள்ளார்ந்த திறன்கள், பலம் மற்றும் பலவீனங்களை அடையாளம் காணுதல், மருத்துவ உதவி அளித்தல், அவர்களின் பெற்றோர்களுக்கு வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்குதல், குழந்தைகளின் மேம்பாட்டுக்கான ஆய்வுகளை ஊக்குவித்தல், தனிப்பட்ட நபர்களுக்கு பயிற்சி அளித்தல் என்பன இந்நிலையத்தின் நோக்கங்கள் ஆகும்.
இந்த கலந்துரையாடலில் பாதுகாப்பு சேவைகளுக்கான மேலதிக செயலாளர் திருமதி. சமந்தி வீரசிங்க, செனஹச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் கேணல் பிரசன்ன ஹெட்டியாராச்சி, கலாநிதி தனபால, பேராசிரியர் ஹேமமாலி பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.