சட்டவிரோத குடியேற்றகாரர்கள் 175க்கும் மேற்பட்டோர் கடற்படையினரால் கைது

ஜனவரி 02, 2020

 • சட்டவிரோத குடியேற்ற காரர்கள் சிலாபம், மட்டக்களப்பு, தேவேந்திரமுனை மற்றும் திருகோணமலையை சேர்ந்தவர்கள்

 • இவர்களில் அதிகமானவர்கள் நடுக்கடலில் கைது செய்யப்பட்டவர்கள்

 • கடற்படையானது இலங்கை விமானப்படை மற்றும் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையுடன் இணைந்து கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளது

2019 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்திற்கு நோக்கி பயணிக்கும் இலங்கையை சேர்ந்த சட்டவிரோத குடியேற்றகாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது.

2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இலங்கையைச் சேர்ந்த 64 சட்டவிரோத குடியேற்றகாரர்கள் நாட்டை விட்டு வெளியேற முயன்றதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

ஆனால் கடந்த ஆண்டில் சுமார் 175 சட்டவிரோத குடியேற்ற காரர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.அவர்களில் அதிகமானோர் சிலாபம் மட்டக்களப்பு தேவேந்திரமுனை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் இருந்து வெளியேறியவர்கள் என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (ஜனவரி 02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேற தயாராகிக் கொண்டிருந்த நிலையிலும் எமது கடல் பிரதேச எல்லைகளுக்குள் வைத்தும் இவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடற்படையின் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலை கடல் பிரதேசத்தில் அண்மையில் 4 பேர் தப்பிக்க முயற்சித்த சம்பவத்தை மேற்கோள் காட்டிய கடற்படைப் பேச்சாளர், ஆட்கடத்தல் மற்றும் மக்கள் கடலில் தமது உயிரை பணயம் வைப்பதை தடுக்கும் வகையில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒரு வலுவான உறவை பகிர்ந்து கொண்டு பணியாற்றி வருவதாக இலங்கை விஜயத்தின் போது அவுஸ்ரேலிய எல்லை பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் கிரெய்க் புரினி தெரிவித்திருந்ததை இங்கு சுட்டிக் காட்டினார்.

நீங்கள் உயிரை பணையம் வைத்து மேற்கொள்ளும் இப்பயணத்தின் மூலம் உங்களுக்கு எவ்வித நன்மைகளும் கிட்டப் போவதில்லை. அவுஸ்திரேலியா மிகக் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை கடைபிடிப்பதால் படகில் சட்டவிரோதமாக பயணிக்கும் எவரும் அவுஸ்திரேலியாவில் வாழவோ அல்லது வேலை செய்யவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் மேஜர் ஜெனரல் புரிணி மேலும் தெரிவித்திருந்தார்.

மேலும் இங்கு கருத்து வெளியிட்ட கடற்படைப் பேச்சாளர்:- இதுபோன்ற சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க மீனவர் சமூகம் தகவல்களை வழங்கி தமது முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பான தகவல்களை வழங்கும் நபர்கள் தொடர்பாக ரகசிய தன்மையை இலங்கை கடற்படை பேணும் எனவும் அவர் உறுதியளித்தார்.