பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு கிளையின் பணிகள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மீளாய்வு

ஜனவரி 07, 2020

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இன்று (ஜனவரி,07) கொழும்பு 03, கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு கிளைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

பாதுகாப்புச் செயலாளராக தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் முதற் தடவையாக வருகை தந்த அவருக்கு, குறித்த இந்நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்து சிரேஷ்ட அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.

இவ்வேளை, பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்த பாதுகாப்புச் செயலாளர், நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் அவர், கடமைகளை கிரமமாக நிறைவேற்றுவதற்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

பின்னர், இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுடன் கலந்துரையாடிய பாதுகாப்பு செயலாளர், ஒவ்வொருவரினதும் பணிகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன் அவர்களின் கடமைகளையும் பொறுப்புக்களையும் செவ்வனே நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட உதவி செயலாளர் பிரசன்ன கிரிவந்துடுவ உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.