தவறாக வழி நடாத்தப்பட்ட இளைஞர்களை நெறிப்படுத்த முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது - பாதுகாப்பு செயலாளர்
ஜனவரி 14, 2020உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புபட்ட மற்றும் தவறாக வழி நடாத்தப்பட்ட இளைஞர்களை நெறிப்படுத்த முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்த்துள்ளார். தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவரின் கீழ் குறித்த இளைஞர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்கள் மீள சமூகத்துடன் இணைக்கவுள்ளதாகவும் அவர் இன்று தெரிவித்தார்.
இலங்கைக்கான இங்கிலாந்து தூதுவர் சாரா ஹல்டன் தலைமையிலான இங்கிலாந்து தூதுக்குழுவினருடன் பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை முறையாக வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை வலுப்படுத்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது விளக்கமளித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தும் உரிய தரப்பினர் அவற்றை முறியடிக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பாக கிடைக்கப்பெற்ற முக்கிய புலனாய்வு தகவல்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனக்குறைவு மற்றும் அசமந்த போக்கு என்பன பெறுமதியான பல உயிர்களை காவு கொள்ளப்படுவதற்கும் சொத்துக்கள் அழிவதற்கும் வழிவகுத்தது என அவர் இங்கு குறிப்பிட்டார்.
முன்னுதாரணமான அரசியல் தலைமையை தன்னகத்தே கொண்ட தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் இதுபோன்ற செயல்பாடுகள் தொடர்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என அவர் வலியுறுத்தினார்.
முன்பு காணப்பட்டது போல் அல்லாது அனைத்து புலனாய்வு நிறுவனங்களும் சிறந்த ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாடுகளுக்காக ஒரே தளத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதை அவர் கோடிட்டுகாட்டினார்.
இராணுவ புலனாய்வு தகவல்களை பகிர்தல், தீவரவாதம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் நிபுணத்துவம் மற்றும் தொழிநுட்பங்களை பகிர்தல் என்பனவற்றில் ஐக்கிய இராச்சியத்தின் உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவத்தார்.
தற்கொலை போராளிகள் உட்பட 12000ற்கும் மேற்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு மீள சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டதை தூதுவரிடம் நினைவு கூர்ந்த பாதுகாப்பு செயலாளர், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு மீள சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்ட அவர்களிடம் புலம்பெயர் தமிழர்கள் பிரிவினை வாத சித்தாந்தத்தை ஊக்குவித்துவருவதையும் அவர் எடுத்துக்காட்டினார்.
தொடர்ந்து இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், விஷேடமாக இந்து சமுத்திர பிரச்சினைகள் தொடர்பான பிராந்திய புலனாய்வு பகிர்வின் அவசியத்தை இதன் போது ஐக்கிய இராச்சிய தூதுவர் மேற்கோள் காட்டினார்.
இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இருநாடுகளுக்குமிடையே சிறந்த ஒத்துழைப்பை பேணுவதற்கும் ஐக்கிய இராச்சிய தூதுவர் இதன்போது அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளுக்கான சிறப்பு பிரதிநிதி கரத் பெய்லி, ஐக்கிய இராச்சிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் டேவிட் அஷ்மன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.