சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க விஷேட நிவாரண காலத்தை அரசாங்கம் அறிவிப்பு

ஜனவரி 14, 2020

அனுமதிப்பத்திரமில்லாமல் சட்டவிரோதமான முறையில் பாயன்படுத்தும் அல்லது தன்வசம் வைத்திருக்கும் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைப்பதற்காக நிவாரண காலத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேற்படி நிவாரண காலம் 2020 பெப்ரவரி 5ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்படவுள்ளது. சட்டவிரோத ஆயுதங்களை சமூகத்திலிருந்து கலையும் நோக்குடன மேற்படி நிவாரண காலத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

எனவே, அனுமதிப்பத்திரமில்லாத சட்டவிரோத ஆயதங்களை குறித்த காலப்பகுதிக்குள் தத்தமது பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலைகளில் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் ஆயுதங்களை அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரண காலப்பகுதிக்குள் ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் தற்பொழுது சமாதானம் மற்றும் அமைதியான சூழல் காணப்படுவதால் அவற்றை உறுதி செய்யும் வகையிலும் அவற்றுக்கு அச்சுறுத்தலாக காணப்படும் அனுமதிப்பத்திரமில்லாமல் சட்டவிரோதமான முறையில் பாயன்படுத்தும் அல்லது தன்வசம் வைத்திருக்கும் சட்டவிரோத ஆயுதங்களை அரசிடம் ஒப்படைப்பதற்காக நிவாரண காலத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, அரசு வழங்கியுள்ள நிவாரண காலப்பகுதிக்குள் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்காமல் தன்வசம் சட்டவிரோதமான முறையில் தொடர்ந்து; வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறியத்தருமாறு பாதுகாப்பு அமைச்சு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.