சிவிலியன் ட்ரோன் பாவனைக்கான தடை அரசினால் நீக்கம்

ஜனவரி 18, 2020

• ஆபத்தான மற்றும் பறப்பதற்கு தடைசெய்யப்பட்ட வலயங்களில் ட்ரோன் பாவனைகளுக்கு தடை.

• சிவிலியன்கள் ட்ரோனை பயன்படுத்த பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி அவசியம்.

• குறித்த இடத்தில் குறித்த நோக்கத்திற்காக மாத்திரம் ட்ரோன்களை இயக்க சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அனுமதி.

 • சிவிலியன் ட்ரோன் பாவனை அதிகரிப்பு.

 

கடந்த ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் ட்ரோன் கமராக்களை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது. ட்ரோன் பாவனைகளுக்கான புதிய விதிமுறைகளுடன் ட்ரோன் பாவனைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நேற்றைய தினம் நீக்கியது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி முதல் விதிக்கப்பட்டிருந்த ட்ரோன் பாவனைகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ட்ரோன் பாவனைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வெளியான 2123/10 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன் பாவனைகளுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

எனினும் ஆபத்தான மற்றும் பறப்பதற்கு தடைசெய்யப்பட்ட வலயங்களில் பறக்கும் ட்ரோன் பாவனைகளுக்கான தடை தொடர்ந்து அமுலில் இருக்கும். ஏனைய ட்ரோன் பாவனையாளர்கள் தமது தேவைகள் கருதி அவற்றை பாவிக்கும் போது பாதுகாப்பு அமைச்சிடம் அதற்கான முன் அனுமதியை பெறுதல் அவசியமாகும்.

ஆளில்லா விமானம் (UAV) என தொழில்நுட்ப ரீதியாக பெயரிடப்பட்ட ட்ரோன், ஒரு பறக்கும் எந்திரம் ஆகும். இது அக உணரிகள் (onboard sensors), மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகியவற்றின் மூலம் தொலைவிலிருந்து செயற்படுத்தப்பட கூடிய ஒரு கருவியாகும். இது இராணுவ நோக்கங்களுக்காகவும், தேடல் மற்றும் மீட்பு, கண்காணிப்பு, போக்குவரத்து கண்காணிப்பு, வானிலை கண்காணிப்பு மற்றும் தீயணைப்பு போன்ற சிவில் நடவடிக்கைகளுக்காகவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது இப்போது புகைப்படம் எடுத்தல், வீடியோகிராபி, விவசாயம் மற்றும் விநியோக சேவைகளில் பிரபலமான பயன்முறையாக மாறியுள்ளது.

ட்ரோன் நடவடிக்கைகளுக்கான தடையை நீக்குவதன் மூலம், சிவில் விமானப்  போக்குவரத்து அதிகாரசபையில் பதிவு செய்யப்படுவதற்கு முன்னர், சில வகை ட்ரோன்களில் சில ஒழுங்குமுறை மாற்றங்கள் இருக்கும் என்று சிவில் வான் போக்குவரத்து அதிகாரசபையின்  நடவடிக்கைப் பணிப்பாளர் லுஷன் பெர்னாண்டோ பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு தெரிவித்தார்.

பாவனைக் உட்படுத்தப்படும் அனைத்து ட்ரோன் கருவிகளும் பாதுகாப்பு அமைச்சின் உரிய அனுமதியை பெற்ற பின்னர் சிவில் வான் போக்குவரத்து அதிகார சபையின் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

"அனுமதி வழங்குவதற்கு முன்னர் ட்ரோன்களின் எடை, அதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா போன்றன எம்மால் சரிபார்க்கப்பட்ட பின்னர் அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன்களுக்கான அனுமதி ஸ்டிக்கர்கள் வழங்கப்படும்" எனவும் அவர் தெரிவித்தார்

இதற்கு அமைவாக, புதிய விதிமுறைகளின் கீழ் ட்ரோன் இயக்குனர்களுக்கு டோன்களை செயற்படுத்துவதற்காக கோரப்பட்ட இடத்தில் மற்றும் குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஊடக நிறுவனங்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், திருமண வீடியோ பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வணிக விளம்பர நிறுவனங்கள் ஆகியோர் ட்ரோன்களை செயற்படுத்துவதற்கு கோரிக்கைகள் விடுகின்றமை குறிப்பிடத்தக்கது.