பொதுமக்கள் மற்றும் பொலிசாரின் பிரச்சினைகளை தீர்க்க ' பொலிஸ் குறை தீர்த்தல் தினம்

ஜனவரி 21, 2020

பொலிஸார் மீதான பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கும், பொலிஸார் மத்தியில் நிலுவையில் உள்ள நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையில்  ‘பொலிஸ் குறை தீர்த்தல் தினம்’ ஜனவரி 29ம் திகதி பத்தரமுல்லவில் உள்ள சுஹுரூபாயவில் நடைபெறவுள்ளது.  

இந்த நிகழ்வு, மகாவலி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி, உள்ளக வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன்புரி அமைச்சரும் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான  சமல் ராஜபக்ஷவின் தலைமயில் 9.00 மணி முதல் 3.00 மணி வரை சுஹுரூபாய பதினான்காவது மாடியில் இடம்பெறவுள்ளது.   

சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவினால் பெறப்பட்ட சுமார் 200 விண்ணப்பங்கள் தீர்வு காண்பதற்காக தெரிவுசெய்யப்பட்டு, அவை தொடர்பான சட்ட விதிகளை பரிசீலித்த பின்னர் பரிந்துரைகளுக்காக  சம்பந்தப்பட்ட போலீஸ் பிரிவுகளுக்கு அனுப்பப்படும்.   

இந்த தினத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு அமைச்சர் ராஜபக்ஷ மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் சீ டி விக்ரமரத்ன ஆகியோரினால் உடனடி தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு தெரிவித்துள்ளது.    

பொலிஸ் தொடர்பாக  புகாரளிக்கப்பட்டு இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது பிற பொது புகார்களால் தீர்வு காணப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வருடாந்த நிகழ்வாக இடம்பெறவேண்டும் என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் குறை தீர்த்தல் தினம் நடைபெறவுள்ளது.   

இலங்கை பொலிஸ் தற்போது பாதுகாப்பு அமைச்சின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் கீழ் செயற்பட்டு வருகின்றது.    

பொதுமக்கள் 011 288 6067 என்ற  தொலைபேசி இலக்கத்துடன்  தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.