--> -->

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் வேண்டுகோள்

ஜனவரி 23, 2020

திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த செயல்திறன் மிக்க உத்திகளை கையாண்டு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு பொலிஸாரிடம் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் பரவலாக காணப்படும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் பொருட்டு  சிறந்த திட்டமிடல் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் பொலிஸார் மேலும் திறம்படச் செயலற்பட முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

திட்டமிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் பாதுகாப்பு அமைச்சில் இன்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேஜர் ஜெனெரல் குணரத்தன இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், திட்டமிட்ட குழுக்களால் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு, சதுப்பு நிலங்களை நிரப்புதல், கப்பம்கோரல், தனியார் நிலங்களை பலவந்தமாகக்  கையகப்படுத்துதல், சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்செல்லல், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவற்றில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் எதிர்கால கொள்கை பற்றி விளக்கமளிக்கையில், சட்ட அமுலாக்க நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சட்டத்தை மதிக்கும் சமூதாயம் மற்றும் பாதுகாப்பான தேசத்தை உருவாக்குவதே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் நோக்கமாகும் என அவர் தெரிவித்தார்.

"குற்றவாளிகளை கைது செய்வதற்கும் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும் பொலிஸாருக்கு  உதவி தேவைப்படும்பட்சத்தில் மேலதிக ஒத்துழைப்புக்களை வழங்கும் வகையில் விஷேட அதிரடிப்படை மற்றும் முப்படையினர் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”. என அவர் இதன்போது உறுதியளித்தார்.

பொலிஸார் தமது நற்பெயரைப் பாதுகாக்கும் அதேவேளை மக்களின் எதிர்பார்க்கும் விதத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்து தமது கடமைகளைச் திறம்பட செய்யுமாறு பொலிஸாரிடம் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல், குணரத்ன கேட்டுக்கொண்டார்.

“சமூகத்தில் ஒருசிலர் பொலிஸாரைப் பற்றி மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கும் அதேவேளை, அனேகமானோர் பொலிஸாரின் சேவையை உன்னதமானதாக கருதுகின்றனர். உங்கள் கடமைகளை நீங்கள் எவ்வாறு மேற்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே  பொலிஸார் பற்றிய பொதுமக்களின் கருத்து அமையும்” எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய தேவைகளை கருத்தில் கொண்டு பொலிஸ் சேவையை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்த அவர், முப்படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை போன்று பொலிஸாருக்கும் வழங்குவதாகவும் உறுதியளித்தார். பதில் பொலிஸ் மா அதிபர், சீ டீ விக்ரமரத்ன, மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"பொலிஸ் சேவையானது எனது மேற்பார்வையின் கீழ் இயங்குவதால், உங்கள் கடமைகளை கௌரவத்துடன் நிறைவேற்ற உங்களுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த நான் ஒத்துழைப்பேன்" எனவும்  அவர் தெரிவித்தார்.
மேலும், பொலிஸ் வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் அதனை மேம்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும்  உறுதியளித்தார்.

“நாட்டுக்கு இன்னும் கூடுதலாக வழங்குங்கள்” எனும் சிங்கப்பூரின் பிரசித்திபெற்ற வாசகத்தை நினைவு கூர்ந்த அவர் அவ்வாசகமே அந்நாட்டின் துரித வளர்ச்சிக்கு  உறுதுணையாக அமைந்தது.

 “எனவே, நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நான் உங்கள் அனைவரிடமும் இன்னும் சற்று அதிகமாகவும் மற்றும் சிறப்பாகவும் செயல்படுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.” எனவும் பாதுகாப்பு செயலாளர் வேண்டுகோள் விடுத்தார்.