ஒழுக்கமிகுந்த பிரஜைகளை உருவாக்க மாணவ படையணியை பிரபல்யமாக்குவது அவசியமாகும் - பாதுகாப்புச் செயலாளர்

ஜனவரி 23, 2020

பாடசாலைகளில் மாணவ படையணியை பிரபலபடுத்துவதன் மூலம் ஒழுக்க விழுமியங்களை  பேணி சட்டத்தை மதிக்கும் பிரஜைகளை உருவாக்க முடியும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இது பாடசாலைகள் மட்டத்தில் இருந்து தேசிய மாணவர் படையணி மூலம் செயல்படுத்தப்படும் முறையான திட்டத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

பாமங்கடையில் உள்ள, தேசிய மாணவர் படையணி தலைமையகத்திற்கு பாதுகாப்பு செயலாளர் இன்று (23) விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது இடம்பெற்ற தேசிய மாணவர் படையணி அதிகாரிகளுடனான சந்திப்பில் கடந்த காலங்களில் அதிகளவிலான பாடசாலை மாணவர்களை தேசிய மாணவ படையணி உள்ளீர்த்திருந்ததாகவும் அந்த கீர்த்தி நாமத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு அர்பணிப்புடன் செயலாற்றுமாறும் அவர் தெரிவித்தார்.

இதற்காக தேசிய மாணவ படையணிக்கு முழுமையான ஆதரவினை தான் வழங்கவுள்ளதாகவும் மேஜர் ஜெனரல் குணரத்தன உறுதியளித்தார்.

தேசிய மாணவர் படையணி பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் ஒன்றாகும். இலங்கையின் பழமையான அமைப்பாக விளங்கும் இது அதிகளவான   இளைஞர்களை கொண்ட அமைப்பாகவும் விளங்குகின்றது.

தேசிய மாணவ படையணி, 3,000ற்கு மேற்பட்ட பாடசாலைகளில் உள்ள ஏறத்தாள 85,000 மாணவர்கள் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சிப்பாய்கள்  பிரிவுகளை உள்ளடக்கிய  29 ஆண்கள் பட்டாலியன்களையும்  பெண்களுக்கான 9 பட்டளியன்களையும் கொண்டுள்ளது. அத்துடன் 3,000ற்கு மேற்பட்ட தேசிய மாணவ படையணி அதிகாரிகள் சேவையாற்றி வருவதாக குறித்த  படையணி தெரிவித்துள்ளது.

1881 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்ட மாணவ படையணி, இளம் மாணவர்களிடையே ஒழுக்கத்தை வளர்ப்பதற்காக கொழும்பு ரோயல் கல்லூரியில், அப்போது அதிபராக கடமையாற்றிய  ஜோன் பி கள் லினால் உருவாக்கப்பட்டது.  பின்னர், இது இலங்கை இலேசாயுத காலாட்படையின் துணைப்படையணியாக  உருவாக்கப்பட்டது. பின்னர் இது ஏனைய பாடசாலைகளுக்கும்  விரிவுபடுத்தப்பட்டது.

இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் உட்பட பெரும்பாலான பாடசாலைகளில் மாணவ படையணி பிளடூன்கள்  உருவாக்கப்பட்டுள்ளன.

தேசிய மாணவர் படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை தேசிய மாணவ படையணியின்  பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) ருவன் குலதுங்க வரவேற்றார்.  பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் மாணவ சிப்பாய்களினால் அவருக்கு  மரியாதை அளிக்கப்பட்டது.   

பாதுகாப்பு செயலாளராக பதவியேற்ற பின்னர்  தேசிய மாணவர் படையணி தலைமையகத்திற்கு முதற்தடவையாக விஜயம் செய்த மேஜர் ஜெனரல் குணரத்ன, தலைமையகத்தின் பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டதுடன், அவர்களின் செயற்பாடுகள்  தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் தேசிய மாணவர் படையணி பிரதி பணிப்பாளர், பிராந்திய பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.