சிறுநீரக சுத்திகரிப்பு வசதிகளுடன் பொலிஸ் வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படும்- பாதுகாப்பு அமைச்சு
ஜனவரி 24, 2020நாரஹன்பிட்டவில் அமைந்துள்ள பொலிஸ் மருத்துவமனையில் நீண்டகாலமாக நிலவிய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய பாதுகாப்பு அமைச்சு முன்வந்துள்ளது. இதற்கமைய பொலிஸ் வைத்தியசாலையில் சிறுநீரக சுத்திகரிப்பு (டயலிசிஸ்) வசதிகள், அவசியமான மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதார சிற்றூழியர்கள் ஆகிவற்றுக்காக நிலவிய தட்டுப்பாடுகளுக்கான தீர்வுகளை பாதுகாப்பு அமைச்சு பெற்றுக் கொடுக்கவுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன நேற்றய தினம் (23) பொலிஸ் வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். இதன் போது அவர், பொலிஸ் வைத்தியசாலயை தரம் உயர்த்த தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தார்.
இங்கு உரை நிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர், "இராணுவம் எனும் பதம், மன உறுதியைக் குறிக்கும். அதிக மன உறுதியால் உற்பத்தித்திறன் அதிகரிக்கும். குழு மனப்பான்மை, பயிற்சி மற்றும் தனிப்பட்ட திறன்களை மேம்படுத்துவதன் மூலம் மன உறுதியை உயர்த்த முடியும், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு வலுவான தலைமை இருக்க வேண்டும், ” எனவும் யுத்த வெற்றியின் பின்னணியில் உள்ள ரகசியம் கீழ் நிலை வீரர்களின் தார்மீகமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய நிர்வாகத்தின் கீழ், இவ்வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைபிரிவுக்கு மேலதிக வசதிகள் வழங்கப்பட்டன என தெரிவித்தார்.
கடந்த கால நிர்வாகத்தின் போது போதியளவு கவனம் செலுத்தப்படாமல் காணப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை தற்போது அனுபவமிக்க மருத்துவ நிபுணர் ஒருவரின் கீழ் செயற்பட்டு வருவதாகவும், அத்துடன் நவீன மருத்துவ வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.
“கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு ஒப்பாக பொலிஸ் பொலிஸ் வைத்தியசாலையும் தரம் உயர்த்தவுள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் சமாதானத்தை கொண்டுவருவதில் பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினரின் பங்களிப்பை பாராட்டிய அவர், யுத்த காலத்தில் இராணுவத்திற்கு மட்டுமன்றி நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டிய பொலிசாருக்குக்கும் ஒட்டுமொத்த தேசமும் நன்றிக்கடன் பட்டதாக மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.
சட்டத்தை மதித்து நடக்கும் கட்டுபாடான சமூகத்தையும், நாட்டையும் உறுதிப்படுத்தும் பணியினை பொலிஸ் கொண்டுள்ளது என வலியுறுத்திய மேஜர் ஜெனரல் குணரத்ன, அவசியப்படும் வேளையில் பொலிசாருக்கு உதவ இராணுவம் எப்போதும் தயாராக உள்ளது என குறிப்பிட்டார்.
இவ்வைத்தியசாலையின் வார்டுகள் மற்றும் இதர பிரிவுகளை சுற்றிப்பார்வையிட்ட அவர், "சிறுநீரக சுத்திகரிப்பு பிரிவின் உடனடி தேவைபாட்டை தான் அவதானித்ததாகவும் மருத்துவ மற்றும் சுகாதார சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பவுள்ளதாகவும் விரைவில் டயலிசிஸ் உபகரணத்தை பெற்றுத்தருவதாகும் வாக்குறுதியளித்தார்.
இவ்விஜயத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன, செயல்பாடுகளுக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிரி குணவர்தன, நலன்புரிநடவடிக்கைகளுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, பொலிஸ் வைத்தியசாலை பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமிக பிரேமசிறி, வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.