காணாமல் போன 20,000 பேர் இறந்துவிட்டதாக கூறப்படும் கூற்றை ஜனாதிபதி ராஜபக்ஷ மறுப்பு
ஜனவரி 25, 2020காணாமல் போனதாக பட்டியலிடப்பட்ட 20,000 பேர் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மேற்கோள் காட்டி ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது.
அண்மையில் ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளரும் ஐ.நா. அபிவிருத்தி செயற்றிட்ட வதிவிட பிரதிநிதியுமான ஹனா சிங்கர் (Hanaa Singer) ஆகியோரிடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை ஊடகங்கள் திரித்துக் கூறியுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
காணாமல் போனதாக பட்டியலிடப்பட்ட 20,000 பேரும் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக சில சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. எவ்வாறாயினும், இந்த அறிக்கைகள் அனைத்திலும், இறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்னர் தேவையான விசாரணைகள் நடத்தப்படும் என்ற முக்கியமான விடயம் சாதூரியமாகவோ அல்லது அறியாமலோ தவிர்க்கப்பட்திருந்தது. மேலும், ஜனாதிபதி ராஜபக்ஷவோ, செல்வி சிங்கரோ காணமல்போனவர்களின் எண்ணிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் குறித்த விடயம் தொடர்பாக பொதுவாகவே கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்குறிப்பிடப்பட்டுள்ளது.