திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கேரள கஞ்சா கடத்தல் இராணுவத்தினரால் முறியடிப்பு
ஜனவரி 27, 202024 கிலோ கேரள கஞ்சா மற்றும் முதுரை மரகுற்றிகளை எடுத்துச் சென்ற எட்டு கடத்தல்காரர்கள் கைது
இலங்கை இராணுவத்தினர், இன்று (26) காலையுடன் நிறைவுற்ற சுமார் 12 மணி நேர விஷேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் சுமார் 24 கிலோ கேரள கஞ்சா மற்றும் 99.5 அடி முதுரை மரகுற்றிகளையும் கைபற்றியுள்ளனர்.
வன்னியிலுள்ள 56ஆவது படைப்பிரிவின் இராணுவ வீரர்கள் ஏ 9 வீதியின் புலியங்குளம் மற்றும் ஓமந்தை ஆகிய இடங்களில் வீதித் தடைகளை அமைத்து மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவ்வாறு கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி பொருட்களை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் பஸ் வண்டிகள் மூலமே கொண்டு செல்லப்பட்டுள்ளன.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தல் எனும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை இராணுவத்தினரால் இவ்விஷேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டலுக்கு அமைய பொலீஸாருக்கு உதவும் வகையில் படையினர் இந்த விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் 16வது சிங்க படைபிரிவின்கீழ் இயங்கும் 561ஆவது படையணி மற்றும் 21வது சிங்க படைபிரிவின்கீழ் இயங்கும் 563ஆவது படையணி ஆகியன நேற்று மாலை முதல் மறுநாள் காலை வரை மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின்போதே இவ்வாறு கைது செய்துள்ளனர்.
முதுரை மரகுற்றிகளை எடுத்துசென்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்ட பஸ் வண்டிகள் மற்றும் கேரள கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட எட்டு சந்தேக நபர்களும் இன்று வவுனியா நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் மற்றும் ஓமந்தை பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.