போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க இலங்கைக்கு பாக்கிஸ்தான் ஒத்துழைப்பு

ஜனவரி 27, 2020

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் செயற்பாடுகளை முறியடித்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு பாக்கிஸ்தான் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

போதைப்பொருள் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்கும் பொருட்டு இலங்கை அரசினால் முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் பாக்கிஸ்தான் தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் சபார் மஹ்மூத் அப்பாசி உறுதியளித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதிக்கும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவிற்கும் இடையிலான சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிப்பதற்காக  பாகிஸ்தான்  ஒத்துழைத்து வரும் அதேசமயம், தகவல் பரிமாற்றம்  மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த இரு நாடுகளுக்கிடையேயான தற்போதுள்ள ஒத்துழைப்பினை மேலும்  மேம்படுத்த வேண்டும் என்றும்  அட்மிரல் அப்பாஸி வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் இதன்போது ‘இலங்கை கடற்படையிடமுள்ள ஹோவர் கிராஃப்ட்டை திருத்தியமைப்பதற்கும் மற்றும் முன்மொழியப்பட்ட இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு தேவையான ஒரு நூலகத்தை அபிவிருத்தி செய்வதற்கும் பாகிஸ்தான் முழுமையான ஒத்துழைப்பை  வழங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு பாகிஸ்தானினால் தொடர்ச்சியாக வழங்கப்படும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த மேஜர் ஜெனரல் குணரத்ன எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கிடையிலான இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒன்றினைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அட்மிரல் அப்பாஸி இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு (25)ஆம் திகதி இலங்கை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பின் ஞாபகார்த்தமாக மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவிற்கும் பாகிஸ்தான் கடற்படை தளபதிக்கும் இடையில்  நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.