தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களை ஒழுங்குபடுத்தும் பாதுகாப்பு அமைச்சு

ஜனவரி 29, 2020

•    பாதுகாப்பு கடைமையில் ஈடுபடுவோருக்கு  குறைந்தபட்ச ஊதியம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்

பாதுகாப்பு கடைமையில் ஈடுபடுவோருக்குக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்துதல், புதிய பாதுகாப்பு நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் அனுமதி பத்திரங்களை  புதுப்பித்தல் உள்ளிட்ட தனியார் பாதுகாப்பு சேவைகளை  ஒழுங்குபடுத்த பாதுகாப்பு அமைச்சு  நடவடிக்கை எடுத்துள்ளது.

தரமான பாதுகாப்பு சேவையை வழங்குவதற்காக, உள்நாட்டில்  இயங்கும் தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு முறையான  திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன  தெரிவித்தார்.

பாதுகாப்பு சேவை வழங்குநர்களை பதிவு செய்தல் மற்றும் அனுமதி பத்திரங்களை  புதுப்பித்தல் ஆகிய செயல்முறைகளை  துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்களுக்கான அனுமதி பத்திரங்களை  புதுப்பிக்கும் நடவடிக்கையின் போது அந்நிறுவனம் தமது ஊழியர்களுக்கான   ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றிற்கு வழங்கும்  பங்களிப்பு தொடர்பாக மேற்பார்வை செய்யப்படும் எனவும் மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.

இலங்கை பாதுகாப்பு சேவை வழங்குநர்கள் சங்கத்தின் (SLSSPA) அங்கத்தவர்களை நேற்று (ஜனவரி, 28) சந்தித்து கலந்துரையாடிய பாதுகாப்பு செயலாளர்,  இலங்கை பாதுகாப்பு சேவை வழங்குநர்கள் சங்கத்தின் ஊழியர்களுக்கு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் வழங்க வேண்டியதன் அவசியத்தையும்  வலியுறுத்தினார்.

தீயணைப்பு, முதலுதவி, பாதுகாப்பு, அவசரகால நிலைமைகளை கையாளுதல் மற்றும் அனர்த்த வேலைகளின் போது  வெளியேற்றும் முறைகள்  போன்ற விடயங்கள் தொடர்பாக வரையறுக்கப்பட்ட  ரக்ன ஆரக்ஷக லங்கா  நிறுவனத்தின் ஆலோசனையின் கீழ் தரப்படுத்தப்பட்ட பயிற்சி வசதிகள் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள்  தொடர்பில் சேவை வழங்குனர் சங்கத்திற்கு எடுத்துரைத்தார்.

வரையறுக்கப்பட்ட  ரக்ன ஆரக்ஷக லங்கா  நிறுவனம், வர்த்தக ரீதியாக  பாதுகாப்புத் தேவைகளை மேற்கொள்ளும் ஒரு அரச நிறுவனம் ஆகும்.

அவ்வப்போது அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுக்கு ஏற்ற வகையில்  பாதுகாப்பு சேவை சங்கங்கள் தங்கள் ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும்  பாதுகாப்புச் செயலாளர் தனியார் பாதுகாப்பு சேவை சங்கத்தினரிடம்வேண்டுகோள்  விடுத்தார்.

தனியார் துறை பாதுகாப்பு சேவை நிறுவனங்களினால் வழங்கப்பட்டுவரும் சேவைகளை பாராட்டிய  மேஜர் ஜெனரல் குணரத்ன, "போரின் போது அவர்கள்  ஒரு காத்திரமான பங்களிப்பை வழங்கியதாகவும் சுட்டிக்காட்டினார்.

"இப்பாதுகாப்பு சேவையை வணிக நடவடிக்கையாக கருத வேண்டாம், அது தேசியப் பாதுகாப்பில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்தார்.

"தேசியப் பாதுகாப்பு இல்லாத நிலையில் நாட்டின் வளர்ச்சியில் முன்னேற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை; முந்தைய நிர்வாகத்தின் போது இராணுவத்தின் தேவைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எதுவும்மேற்கொள்ளப்படவில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (பாதுகாப்பு) பிரசன்ன கிரிவத்துடுவ, சிரேஷ்ட உதவிச் செயலாளர் (சிவில் பாதுகாப்பு) பிரியந்த சுமனசேகர மற்றும் உதவிச் செயலாளர் (சிவில் பாதுகாப்பு)  ஷிமாலி திசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.