இலங்கையுடன் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்ள பாகிஸ்தான் உறுதி

ஜனவரி 31, 2020

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை வெற்றிகரமாக  முறியடிக்கும் செயற்பாடுகளுக்கு   புலனாய்வு தகவல்களை பகிர்வதனூடாக  முழுமையான ஒத்துழைப்பு வழங்க  பாக்கிஸ்தான்  உறுதியளித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கையினால் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் உதவும் வகையில்  இரு நாடுகளுக்குமிடையிலான  புலனாய்வுத்துறையை வலுப்படுத்த பாக்கிஸ்தான் தொடர்ந்து  ஒத்துழைப்பு வழங்கும்  என இலங்கைக்கான   பாகிஸ்தானிய புதிய உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கத்தாக் தெரிவித்தார்.

பாகிஸ்தானிய  உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கத்தாக் மற்றும்  பாதுகாப்புச் செயலாளர்  மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் நேற்று (ஜனவரி, 30) இடம்பெற்றது.

இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலில்  "இலங்கையும் பாகிஸ்தானும் இந்து சமுத்திரத்தின் கேந்திர  முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அமைந்திருப்பதால், போதைப்பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாத அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு எதிரான  புலனாய்வு தகவல் பகிர்வை வலுப்படுத்த  இரு தரப்பினரிடையே  நெருக்கமான ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் மிக அவசியம்" என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொண்ட வேளையில் இலங்கை தலைமைகள் தனது நாட்டிற்கு உதவ எப்போதும் தயார் நிலையில் இருந்ததற்காக இலங்கைக்கு தனது நாடு நன்றிக்கடன் பட்டுள்ளதாக பாகிஸ்தான்  உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில்  பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்பட்டபோதும் தனது கிரிக்கெட் அணியை அனுப்ப இலங்கை விருப்பம் தெரிவித்ததை பாராட்டிய அவர், "இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் பல தசாப்தங்களாக நீடித்துவருவதாகவும், இரு நாடுகளும்  நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொண்ட வேளையில்  ஒருவருக்கொருவர் பரஸ்பர ஒத்துழைப்புடன்  செயற்பட்டதாகவும் ," தெரிவித்தார்.

இலங்கையுடன் புலனாய்வு தகவல்களை  பகிர்ந்து கொள்ளல்,  இராணுவ திறன்களை வலுப்படுத்தலுக்கு அவசியமான  தொழில்நுட்ப திறன்களை விரிவுபடுத்தல் போன்ற செயற்பாடுகளில்  ஒன்றிணைந்து செயற்பட   பாகிஸ்தான் மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

உயர் ஸ்தானிகர் கத்தாக், பாகிஸ்தான் இராணுவத்தில் சேவையாற்றிய காலப்பகுதியில் முதற்தடவையாக   இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.  அத்துடன் அவர், கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த  ஞாயிறு தாக்குதலை சுட்டிக்காட்டி, கடந்த காலத்தில் பெற்றுக்கொண்ட  அனுபவங்களின் அடிப்படையில், இரு நாடுகளும் எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஒருவருக்கொருவர் இணைந்து உறுதியான புலனாய்வு தகவல்  பகிர்வை செயல்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார். .

 இராணுவ புலனாய்வுதுறை  உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை வலுப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்த  பாதுகாப்பு செயலாளர் , பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தீவிரவாதத்திற்கு எதிராக போராட இலங்கைக்கு உதவ முன்வரவேண்டும் எனவர் கேரிக்கை விடுத்தார்.

"முக்கிய புலனாய்வு தகவல்களை  பகிர்ந்து கொள்வதன் மூலம் தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்  இலங்கைக்கு ஆதரவளிக்கும் நாடுகளில்  பாகிஸ்தானும்  ஒன்றாகும்" என கூறிய அவர்,   பயங்கரவாதத்திற்கு எதிரான மூன்று தசாப்த கால யுத்தத்தை 2009ஆம் ஆண்டு மே மாதம்  முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் நாட்டில் எந்தவொரு பயங்கரவாத செயற்பாடுகளும் அறியப்படாத நிலையில் உயிர்த்த  ஞாயிறு தாக்குதல் இந்த தேசத்தில் இடம்பெற்றதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

"நாம்  ஒரு விரிவான புனர்வாழ்வு திட்டத்தின் கீழ் 12,400 க்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களை புனர்வாழ்வுவளித்து மீண்டும் சமூகத்துடன் ஒன்றிணைத்தோம். இன்று, அவர்கள் அமைதியான வாழ்க்கையை நடத்துகிறார்கள், இலங்கையின் புனர்வாழ்வு செயல்முறை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பாராட்டைப் பெற்றுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.  

போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து  190 கிலோ ஹெராயின் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது தொடர்பாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல் குணரத்ன, போதைப்பொருள் கடத்தலுக்கு  எதிராக  புலனாய்வு அமைப்புகளுடன்  இணைந்ததாக  இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு செயலாளர், தீவிரவாதம்  ஒரு வளர்ந்து வரும் அச்சுறுத்தல் ஆகும் என மேற்கோள் காட்டியதுடன் , இராணுவ பயிற்சி வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நிபுணத்துவ அறிவை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்வதற்கான வழிகள் குறித்தும்  கலந்துரையாடினார்.

மேலும், இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் பாகிஸ்தான்  உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கத்தாக் மற்றும்  பாதுகாப்புச் செயலாளர்  மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோருக்கிடையே நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.