இலங்கை இராணுவத்திற்கு மேலதிக பயிற்சி வசதிகளை வழங்குவதாக ரஷ்ய ஜெனரல் உறுதியளிப்பு
பெப்ரவரி 03, 2020இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ரஷ்ய குடியரசின் படைத்தளபதி ஜெனரல் ஒலேக் சல்யுகோவ் இலங்கை இராணுவத்திற்கு தேவையான மேலதிக பயிற்சி வசதிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
இரு நாடுகளுக்கிடையில் நிலவும் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்தும் விடயங்கள் தொடர்பாகவும் மற்றும் பயங்கரவாத ஒழிப்புக்கான ஒத்துழைப்பு வழங்குவதில் புலனாய்வு பகிர்வினை மேற்கொள்வதன் அவசியம் தொடர்பாகவும் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் ( ஓய்வு) கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த வருடம் சுமார் 72 கெடட்ஸ் பயிற்றப்பட்டதாகவும் அதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்வதாகவும் மற்றும் இலங்கை விமானப்படையின் வான்வழி நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த ரஷ்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் போருக்கு பின்னரான காலப்பகுதியில் பல்வேறு சர்வதேச அமைப்புக்களால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வரும் அதேவேளை பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதை இட்டு இலங்கை அரசாங்கம் ரஷ்ய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாக பாதுகாப்பு செயலாளர் குணரத்ன தெரிவித்தார்.
மேலும் இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையில் நிலவி வரும் நீண்டநாள் இருதரப்பு உறவுகள் பற்றியும் நினைவுகூர்ந்தார்.
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கை இராணுவத்தின் திறமைகளை பாராட்டிய ரஷ்ய ஜெனரல் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கிடையே பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் நிபுணத்துவங்களை பரிமாறிக் கொள்வதற்கும் உடன்பட்டனர்.
பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது அழைப்பையேற்று ஐந்து நாள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த ரஷ்ய ஜெனரல் இலங்கையில் நாளை இடம்பெறவுள்ள 72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளார். இந்நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்து கொள்ள அழைப்பு விடுத்தமைக்கு பாதுகாப்பு செயலாளருக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் இருவருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.