சேவையில் இருந்து சட்டவிரோதமாக படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள், சட்ட பூர்வமாக சேவையிலிருந்து விலகிச்செல்வதற்காக அல்லது சேவையில் மீள இணைந்து கொள்வதற்கான ஒரு வார கால பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 2020.02.05ஆம் திகதி முதல் 7 நாட்களை பொது மன்னிப்பு காலமாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான ஊடக அறிக்கை நேற்று (பெப்ரவரி, 04) பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டது. இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமையவே இந்த ஒருவார கால பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று தசாப்தகாலமாக நாட்டில் நிலவிய யுத்தத்தின் போது தாய் நாட்டிற்காக சேவையாற்றும் பொருட்டு முப்படையில் இணைந்து கொண்ட படைவீரர்களில் சிலர் எதிர்கொண்ட பல்வேறு சிக்கல்கள் மற்றும் வசதியின்மை காரணமாக முறையற்ற ரீதியில் சட்டவிரோதமாக படையிலிருந்து நீங்கிச் சென்றனர். இவ்வாறு 2019.9.30ஆம் திகதிக்கு முன்னர் சட்டவிரோதமாக படையிலிருந்து சென்றவர்களுக்காக இப் பொதுமன்னிப்பு காலம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.