பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதில் இலங்கைக்கு முக்கிய பங்குண்டு - பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி

பெப்ரவரி 10, 2020

பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதில் இலங்கையின் வகிபாகம் இன்றியமையாத ஒன்றாகும் என பாகிஸ்தான் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் முஜாஹித் அன்வார் கான் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் இலங்கையுடன்புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாகவும் உறுதியளித்தார்.   

உலகலாவிய நிகழ்வாக மாறியுள்ள பயங்கரவாதத்திலிருந்து பாகிஸ்தானும் இலங்கையும் ஒரு பொதுவான அச்சுறுத்தலையும் சவாலையும் எதிர்கொள்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.  

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் முஜாஹித் அன்வர் கான் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இன்று (பெப்ரவரி,10) இடம்பெற்றது. இதன்போது கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் விமானப்படை தளபதி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள் கடத்தல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள பாகிஸ்தான் இலங்கைக்கு அளித்துவரும் உதவிகள் தொடர்பாக தெரிவித்தார்.   

இலங்கைக்கான தனது விஜயத்தின் போது  பிரதமர் மற்றும் முப்படை தளபதிகளுடனான சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், இருநாடுகளும் இறுக்கமான சூழலில் ஒருவருக்கொருவர் ஆதரவாக செய்யப்பட்டதை நினைவு கூர்ந்ததுடன் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் இது போன்றதொரு அசம்பாவிதம் மீண்டும் நாட்டில் ஏற்படாதிருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவர் பாராட்டினார்.

நாட்டில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகவும் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவர்களின் தலைமையில் பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க முடிந்ததாக குறிப்பிட்டார்.

விரிவான மற்றும் வெற்றிகரமான புனர்வாழ்வு செயல்முறையின் கீழ் 12,000 க்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்களின் குடும்பங்களுடன் அமைதியான வாழ்க்கையை வாழ சமூகத்தில் மீண்டும் அவர்கள்  ஒன்றிணைக்க பட்டது தொடர்பாகவும் அவர் கவனத்தை ஈர்த்தார்.   

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக செயற்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய மேஜர் ஜெனரல் குணரத்ன, பாகிஸ்தான் மிகவும் பயனுள்ள புலனாய்வு திறன்களைக் கொண்டுள்ளதாகவும் இது சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள் கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு பயனளிக்கும் எனவும் குறிப்பிட்டார்.    

இதன்போது கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி, இலங்கை விமானப்படைக்கு கூடுதல் பயிற்சி வாய்ப்புகளை வழங்க உதவுவதாக உறுதியளித்தார்.   

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் மேஜர் ஜெனரல் குணரத்ன மற்றும் எயார் சீப் மார்ஷல் கான் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.    

பாகிஸ்தான் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் முஜாஹித் அன்வர்கான் கடந்த புதன்கிழமை (05) உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.