டிபெக்ஸ்போ–20 பாதுகாப்பு கண்காட்சியில் இந்திய பாதுகாப்பு முக்கியஸ்தர்களுடன் பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு
பெப்ரவரி 08, 2020லக்னோவில் நடைபெறும் 11வது ‘டிபெக்ஸ்போ-2020’ பாதுகாப்பு கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு இந்தியாவினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இந்தியா சென்றடைந்தார். புதன்கிழமையன்று ஆரம்பமான பாதுகாப்பு கண்காட்சியினை பார்வையிட பாதுகாப்பு செயலாளருடன் பதில் கடமையாற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் கலந்து கொண்டார்.
உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு உற்பத்திகளின் கண்காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற இந்தியாவின் தரை, கடல் மற்றும் வான் திறன்களை பறைசாற்றும் பாதுகாப்பு தொடர்பான வன்பொருள் மற்றும் தொழில்நுட்பத்தின் மெகா கண்காட்சி, சுமார் 150 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் முன்னிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
குறித்த இந்த கண்காட்சியின் இடையே, மேஜர் ஜெனரல் குணரத்ன இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கலாநிதி அஜய் குமார் உட்பட பல இந்திய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சினேகபூர்வ கலந்தரையாடலில் தென்னாசிய பிராந்தியத்தில் பாதுகாப்பு நலன்கள், இராணுவ தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி மற்றும் புதுமையான தயாரிப்புகள் உள்ளிட்ட இருதரப்பு விடயங்கள் குறித்து இந்திய பாதுகாப்பு செயலாளருடன் மேஜர் ஜெனரல் குணரத்ன கலந்துரையடினர்.
மேலும், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் குணரத்ன பாதுகாப்பு கண்காட்சியில் கலந்து கொண்ட பல வெளிநாட்டு இராணுவத் தலைவர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
மேஜர் ஜெனரல் குணரத்ன தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு, இக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இராணுவ தளவாடங்கள் பார்வையிட்டனர். அவர்கள் அதிநவீன ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பல்கள், ரோபோக்கள், வாகனங்கள், துப்பாக்கிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், பிற முகவர் நிலையங்களின் தொழில்நுட்ப வல்லுனர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பல்வேறு புதுமையான கண்டுபிடிப்புக்களை கூர்ந்து அவதானித்ததுடன் அவைகளின் தொழிற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.
டிஃபெக்ஸ்போ இந்தியாவின் தரை, கடல் வான் பாதுகாப்பு உற்பத்திகளின் புதிய மற்றும் எதிர்கால பாதுகாப்பு தொழில்நுட்ப திறன்களை காட்சிப்படுத்தும் உலகின் பாரிய கண்காட்சிகளில் ஒன்றாகும் என்பது குறிப்படத்தக்கது.