பயங்கரவாதத்திற்கு இடமளிக்க போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் உறுதியளிப்பு

பெப்ரவரி 14, 2020

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையின் கீழ் எதிர்காலத்தில் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு  இடமளிக்க போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன உறுதியளித்துள்ளார்.

30 ஆண்டுகள் போராடி கொடிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் செய்த மகத்தான தியாகங்களின் மூலம் நாட்டில் அமைதி நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் பாதுகாப்பு செயலாளரை கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.

அன்புள்ள மாணவ மற்றும் மாணவிகளே, உங்களது பாதுகாப்பை நான் உறுதி செய்யும் அதேவேளை, கடந்த காலங்களில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கும் முன்னுரிமை அளித்து செயற்பட்ட நிலையில் தேசிய பாதுகாப்பில் அக்கறை செலுத்தப்படவில்லை ஆனால் இந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பில் மிகவும் கரிசனையோடு செயற்படும் என தர்மபால வித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

தனது பாடசாலை நாட்களை நினைவு கூர்ந்த அவர் தான் எவ்வாறு கெடெட் குழுவில் இணைந்துகொண்டார் என்பதனையும் இங்கு குறிப்பிட்டார்.

“உங்களின் எதிர்காலத்திற்காக நாங்கள் எங்களின் பல இளைஞர்களை இழந்தோம்”  என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் தியாகத்துடன் கஷ்டப்பட்டு வென்றெடுத்த சமாதானத்தை பாதுகாப்பது தற்பொழுது உங்கள் கடமை என மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற மற்றும் சேவையிலுள்ள முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் தொடர்பாக குறிப்பிடுகையில் இப்பாடசாலை எமது நாட்டிற்கு தமது சேவையினை வழங்கும் வகையில் அதிக எண்ணிகையிலான பாதுகாப்பு படையினர், பொலிஸ் மற்றும் அரச உயர் அதிகாரிகள் ஆகியோரை உருவாக்கியுள்ளதை பெருமையுடன் தெரிவித்தார்.  

போதைப்பொருள் தொடர்பாக கருத்து தெரிவித்த செயலாளர் தற்பொழுது போதைப்பொருளுக்கு அடிமையாவது மாணவர்கள் மத்தியில் பாரிய பிரச்சினையாக காணப்படுவதாக தெரிவித்தார். “அன்புள்ள மாணவர்களே சட்டவிரோத போதைப்பொள் பாவனைக்கு முயற்சிக்கவேண்டாம் எனவும் அவற்றுக்கு அடிமையாகக்கூடாது” என்பதாகவும் தெரிவித்த அவர் அவ்வாறு அடிமையாகும் பட்சத்தில் அவற்றிலிருந்து மீள்வது பாரிய சவாலாகும் என்பதாகவும் அவர் தெரிவித்தார்.  

மேஜர் ஜெனரல் கமல் குணரத்தன தர்மபால வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்பாடசாலையானது 1942 ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய பௌத்த கலவன் பாடசாலையாகும்.