இராணுவ தளபதியின் அமெரிக்கா பயணத் தடைக்கு இலங்கை கடுமையாக எதிர்ப்பு

பெப்ரவரி 14, 2020

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் தற்போதைய இராணுவ தளபதியும், பதில் பாதுகாப்பு பிரதானியுமான லெப்டினன்ட் ஜெனரல் சில்வா மற்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் அமெரிக்காவால் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதை கடுமையாக ஆட்சேபிக்கும் அதே வேளையில், தகவல் ஆதாரங்களின் நம்பகத்தன்மையை சரிபார்த்து அதன் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் அமெரிக்காவிடம் கோரியுள்ளது.

தன்னிச்சையாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில், லெப்டினன்ட் ஜெனரல் சில்வா மற்றும் அவரது அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் அமெரிக்க அரசாங்கத்தால் பயணத்தடை விதித்தமைக்கு இலங்கை அரசாங்கம் கடும் ஆட்சேபனை தெரிவிக்கிறது.

ஊடக வெளியீடு

லெப்டினன்ட் ஜெனரல் சில்வா மற்றும் அவரது உடனடிக் குடும்பத்திற்கு அமெரிக்காவால் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு இலங்கை தனது கடுமையான

ஆட்சேபனையை தெரிவித்துள்ளது

அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் இலங்கை இராணுவத்தின் தற்போதைய தளபதியும், பாதுகாப்புப் படைத் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது உடனடிக் குடும்ப உறுப்பினர்களை நியமித்துள்ளதாக சிறிது நேரத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. பொது நியமனமானது அவர்கள் அமெரிக்காவிற்கு நுழைவதற்கு தகுதியற்றவர்களாக்குகின்றது.

சுயாதீனமாக சரிபார்க்கப்படாத தகவல்களின் அடிப்படையில், லெப்டினன்ட் ஜெனரல் சில்வா மற்றும் அவரது உடனடிக் குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளுக்காக இலங்கை அரசாங்கம் தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவிக்கின்றது.

சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில், லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அப்போதைய அரச தலைவரால் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதுடன், அவருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் பற்றிய ஆதாரபூர்வமான அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை என்பதையும் அரசாங்கம் மீண்டும் வலியுறுத்துகின்றது. அவர் மிகவும் சிரேஷ்ட இராணுவ அதிகாரி என்ற காரணத்தினால், தற்போதைய அரச தலைவர் கோத்தாபய ராஜபக்ஷ அவர்களால் பதில் பாதுகாப்புத் தலைவராக தரமுயர்த்தப்பட்டார்.

இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சில்வா நியமிக்கப்பட்ட 6 மாதங்களுக்குப் பின்னர் இந்த பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமையானது, தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் முக்கிய பதவிகளை வகிப்பதற்கு நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவத்துடன் கூடிய நபர்களுக்கு அழைப்பு விடுப்பதற்கான ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியின் சிறப்புரிமையை வெளிநாட்டு அரசாங்கமொன்று கேள்விக்குட்படுத்துகின்றமை ஏமாற்றமளிக்கின்றது.

தகவல் மூலங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும், அதன் முடிவை மறுபரிசீலனை செய்வதற்கும் இலங்கை அரசாங்கம் ஐக்கிய அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கின்றது.

பொது இராஜதந்திரப் பிரிவு

14 பெப்ரவரி 2020