சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பாக தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினர்

பெப்ரவரி 18, 2020
  • பொது மன்னிப்பு காலத்தின்போது 200 சட்டவிரோத ஆயுதங்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு
  • சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

சட்டவிரோத ஆயுதங்களை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த  ஒரு வார  பொது மன்னிப்பு காலம் முடிவடைந்ததையடுத்து, பொலிஸ் மற்றும் ஏனைய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து  சட்டவிரோத ஆயுதங்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொதுமன்னிப்புக்  காலத்தில், சட்டரீதியிலான அனுமதிப்பத்திரம்  இல்லாத அல்லது அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படாத சுமார் 200ஆயுதங்கள்,  ஒன்பது மாகாணங்களிளும் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள அனைத்து சட்டவிரோத ஆயுதங்களையும் சேகரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட  பணிப்புரைக்கு அமைய  பாதுகாப்பு அமைச்சு,  இம்மாதம்  5ம் திகதி  முதல் 12ம் திகதி  வரையான காலப்பகுதியை சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான பொது மன்னிப்பு காலமாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு  விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களில்  12மிமீ ஆழ்துளை குறுந்தூர துப்பாக்கிகள் – 137, 16 மிமீ ஆழ்துளை குறுந்தூர துப்பாக்கிகள் – 15, இரட்டை குழல் குறுந்தூர துப்பாக்கிகள் – 02, ரிப்பீட்டர் ரக குறுந்தூர துப்பாக்கிகள் 05, ரைபிள் ரக துப்பாக்கிகள் 06, ரிவால்வர் ரக துப்பாக்கிகள் 07, பிஸ்டல் ரக துப்பாக்கிகள் 08 மற்றும் ஏனைய ரக துப்பாக்கிகள் 20  ஒப்படைக்கப்பட்டுள்ளன .

பொதுமன்னிப்பு காலத்தில் சட்டரீதியிலான அனுமதி இல்லாமல் அல்லது அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படாத நிலையிலிருந்த ஆயுதங்களை ஒப்படைத்தவர்கள் மீது எந்தவித  சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படமாட்டது என தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன, சட்டவிரோதமாக ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பவர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சட்டவிரோத  ஆயுதங்களால் ஏற்படுத்தப்படும்  அச்சுறுத்தல்களை தடுக்கும் நோக்கிலுமே அவற்றை  ஒப்படைப்பதற்கான   பொதுமன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு வழங்கியிருந்தது.

வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தின் போது ஆயுதங்களை கையளித்தவர்களுக்கு அதற்கான அனுமதிப் பத்திரம் அல்லது புதுப்பித்தல்களை பெறுவதற்காக சந்தர்ப்பம் அவர்கள் ஆயுதங்களை பொலிஸிடம்  ஒப்படைத்த நாளில் இருந்து மூன்று மாதங்கள் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தின் பின்னர் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்காமல் தம்வசம் வைத்திருப்பவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

1916ஆம் ஆண்டு 33ம் இலக்க துப்பாக்கி கட்டளை சட்டத்தின் பிரகாரம், அனுமதி பத்திரம் இல்லாமல் ஆயுதங்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும், இதற்காக  அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.

சட்டரீதியிலான அனுமதிப்பத்திரம் இல்லாத நிலையில்  ஆயுதங்களை ஒப்படைக்க தவறியவர்களுக்கு, இதுவே அவர்களின்  முதல் குற்றமாக இருந்தால், அவர்களுக்கு ரூ. 10,000 அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படாத கடூழிய சிறைத்தண்டனை அல்லது இரண்டும்  இணைந்த தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.