துறைசார் மற்றும் ஒழுக்கமுள்ள பொலிஸாரே நாட்டுக்கு தேவை- பாதுகாப்பு செயலாளர்

பெப்ரவரி 21, 2020

நாட்டில் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக்கூடிய துறைசார் மற்றும் ஒழுக்கமுள்ள பொலிஸாரின் அவசியத்தை பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு)கமல் குணரத்ன வலியுறுத்தினார்.   

மக்களுடன் நட்பு ரீதியாக பொலிஸ்சேவையை வழங்குவதற்காக அடிப்படை பயிற்ச்சியின் ஊடாக பெறப்பட்ட உயர் தரத்திலான ஒழுக்கத்தையும் துறைசார் நிபுணத்துவத்தை பேணுவதற்கும் நாட்டில் அமைதியான மற்றும் சுபிட்சமான யுகத்தினை உருவாக்குவதற்கும் பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் தமது பொலிஸ் பயிற்சியினை நிறைவு செய்து தமது சேவையில் இணைவதற்காக வெளியேறும் பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.   

பொலிஸ் சேவைக்கு ஒழுக்கம் மற்றும் துறைசார் நிபுணத்துவம் இருப்பது மாத்திரமின்றி ஒழுக்கமுள்ள சமுதாயத்தை கட்டியெழுப்புவதிலேயே தங்கியிருப்பதாகவும் அவர் மேலும் இங்கு குறிப்பிட்டார்.   

மேலும் நிலையான அபிவிருத்தியை நோக்கி  நாட்டை வழிநடத்துவது பாரிய சவால் எனவும் அவர் தெரிவித்தார்.  

பொலிஸ் சேவையில் இணைவதற்காக 400 கான்ஸ்டபிள் மற்றும் 128 போக்குவரத்து பிரிவு கான்ஸ்டபிள் உட்பட சுமார் 528க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தமது பயிற்சியினை நிறைவு செய்து வெளியேறுகின்றனர். இவர்களில் 61 தமிழ் அதிகாரிகளும் மூன்று முஸ்லிம் அதிகாரிகளும் உள்ளடங்குவர்.   

இவ்வாறு வெளியேறும் அதிகாரிகளுக்கு, சமூக பொலிஸ் சேவை, சட்டம் ஒழுங்கை நிர்வகித்தல், அனர்த்த முகாமைத்துவம், தொடர்பாடல் திறன் அபிவிருத்தி, மொழித்திறன் அபிவிருத்தி மற்றும் தகவல் தொழிநுட்பம் ஆகிய  ஸ்காட்லாந்து நாட்டின் நிபுணத்துவம் வாய்ந்த பொலிஸாரினால் வடிவமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டங்கள் போதிக்கப்பட்டுள்ளன.   

இப்பயிற்சியின் போது தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.   

இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கிடையே நினைவு சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.   

இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், முப்படை மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பயிற்சியினை நிறைவு செய்து வெளியேறும் அதிகாரிகள் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.