'விருசுமிதுரு' வீடமைப்புத் திட்டத்தை துரிதப்படுத்தும் பாதுகாப்பு அமைச்சு

பெப்ரவரி 26, 2020

தாய்நாட்டிற்காக உயிர்நீர்த்த  மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களது  குடும்பங்களின் வீட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட "விருசுமிதுரு" வீடமைப்புத் திட்டத்தை பாதுகாப்பு அமைச்சு துரிதப்படுத்தியுள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ரணவிரு சேவா அதிகாரசபை ஆகியவற்றினால் இணைந்து செயற்படுத்தப்பட்ட இந்த செயற்றிட்டம் 2020ஆம் ஆண்டிற்குள் பூர்த்தி செய்வதற்கு கடந்த  அரசாங்கத்தின் கீழ் திட்டமிடப்பட்டிருந்தது.

குறித்த வீடமைப்பு திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் மீளாய்வுக் கூட்டம்  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இந்த மீளாய்வுக் கூட்டத்தில்  வீட்டுத்திட்டத்தை முறையாக  நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் தொடர்பான பிரச்சினைகளை கலந்துரையாடிய பாதுகாப்பு செயலாளர், எஞ்சியுள்ள பணிகளை துரிதமாக முடிப்பதற்கான காலக்கெடுவை நீடிக்குமாறு அறிவுரை வழங்கினர்.

"தாய் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு தியாகங்கள் செய்த போர் வீரர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாம் முன்னுரிமை அளித்துள்ளோம். நிரந்தர வீடு என்பது ஒரு அவர்களின் பிரச்சினை ஒன்று, அவற்றை நாம் தீர்த்து அவர்களுக்கு கெளரவமான வாழ்க்கை வழங்க தயாராக உள்ளோம் "என அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்திற்கான உத்தேச ஒதுக்கீட்டு நிதி, நீட்டிக்கப்பட்ட காலக்கெடு,  வீட்டுவசதி அலகுகள் ஆகியன புதிய அமைச்சரவைப் பத்திரத்திற்கான திருத்தங்களில் சேர்க்கப்பட்டு விரைவில் அமைச்சரவை ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சும் ஏனைய பங்குதாரர்களும் இணைந்து 2022ம் ஆண்டு ஆகும்போது பகுதியளவில் முடிக்கப்பட்ட மற்றும் முழுமையான வீடுகள் அடங்கலாக சுமார் 3,650 வீடுகளை "விருசுமிதுரு" வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்க எதிர்பார்க்கின்றனர்.

இந்த வீட்டுத் திட்டத்தின் கீழ், தகுதிவாய்த  பயனாளிகள் ரணவிரு சேவா அதிகார சபையினால்  தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இராணுவ, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள வீரர்களினது சாரீர உதவிகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

வீட்டினை முழுமையாக பூர்த்தி செய்வதற்கான நிதி ரணவிரு சேவா அதிகார சபையினால்  ஆறு தவணைகளில் வழங்கப்படவுள்ளது.

இந்த மீளாய்வுக்கூட்டத்தில், பாதுகாப்பு சேவைகளுக்கான மேலதிக செயலாளர் சமந்தி வீரசிங்க, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ரத்னாயக சூளானந்த, ரணவிரு சேவா அதிகார சபை தலைவர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) நந்தன சேனாதீர, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் லலித் எசிரசிங்க, ரணவிரு சேவா அதிகார சபை பணிப்பாளர் பிரிகேடியர் (ஒய்வு) விஜித் சுபசிங்க, பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையின்   நலன்புரி பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.