'விருசர' வரப்பிரசாத அட்டைகள் மூலம் 200,000ற்கு மேற்பட பாதுகாப்பு படை வீரர்கள் பயன்

பெப்ரவரி 27, 2020
  • விருசர வரப்பிரசாத அட்டை பயனாளர்களுக்கு, பொருட்கொள்வனவு மற்றும்  சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பிற சேவைகளில்  சலுகைகள்

தாய்நாட்டிற்காக உயிர்நீர்த்த படைவீரர்களின் குடும்பங்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்கள் உட்பட 200,000ற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்களுக்கு  ‘விருசர’ வரப்பிரசாத அட்டைகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக சுமார் 44,500ற்கும் மேற்பட்ட விருசர வரப்பிரசாத அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் தொடராக  1983ம் ஆண்டு  முதல் 2009ம் ஆண்டு  வரையிலான காலப்பகுதியில் சேவையாற்றிய முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த  படை வீரர்களுக்கு பலதரப்பட்ட தனிச்சிறப்பான சலுகைகளை பெற்றுக்கொடுக்கும் விருசர  வரப்பிரசாத அட்டைகள் வழங்கப்படவுள்ளது.

குறித்த அட்டை உரிமையாளர்கள், அரச  மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து சுகாதாரம், கல்வி, வங்கி, காப்பீடு மற்றும் லீசிங் உள்ளிட்ட பிற சேவைகளில் சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

விருசர வரப்பிரசாத அட்டைகள் தொடர்பாக ஆராயும் விஷேட கலந்துரையாடல் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன,  ரணவிரு சன்சத எனும் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக சகல பயனாளிகளுக்கும் விருசர அட்டைகளின் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய  வரப்பிரசாதங்கள் தொடர்பான  விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுக்குமாறு ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) நந்தன சேனாதீரவுக்கு அறிவுரை வழங்கினார்.

விருசர அட்டை உரிமையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுக்கும் வகையில், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள், பிரசித்திபெற்ற வங்கிகள், நிதி நிறுவனங்கள், சூப்பர்மார்க்கெட் வலையமைப்புகள் மற்றும் தனியார் சுகாதார வழங்குநர்கள் உள்ளிட்ட பட்டியலிடப்பட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அனைத்து முகவர்களுக்கும், அந்தந்த விற்பனை நிலையங்கள், விற்பனைப் பணியாளர்கள் மற்றும் முன்னனி அலுவலகங்களுக்கு விருசர திட்டம் குறித்து அறிவுருத்தப்பட்டுள்ளதாக  பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

தெரிவுசெய்யப்பட்ட  பயனாளிகளுக்கு விருசர வரப்பிரசாத அட்டைகளை விநியோகிக்கும் மூன்றாம் கட்டத்தினை எதிர்வரவுள்ள  படைவீரர்கள் தினத்தில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் சேனாதீரவுக்கு பணிப்புரை விடுத்தார்.

"எமது நாட்டிற்கு அமைதியை பெற்றுக் கொடுப்பதற்காக தமது வாழ்க்கையை தியாகம் செய்த அங்கவீனமுற்ற போர் வீரர்கள், பிராந்திய மருத்துவமனைகளில் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்" என தெரிவித்த அவர், ரணவிரு சேவா அதிகார சபையின்  பிராந்திய பணிப்பாளர்கள்  மாவட்ட வைத்தியசாலைகளுடன் ஒருங்கிணைந்து அவர்களுக்கு எவ்வித தாமதமும் இன்றி சேவைகளை வழங்குவதை உறுதி செய்யவேண்டும்  எனவும்  கேட்டுகொண்டார்.

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் விருசர ஸ்டிக்கரை அறிமுகப்படுத்தவும், எதிர்காலத்தில் எஸ்எம்எஸ் சேவைகள் மூலம் அட்டை உரிமையாளர்களுக்கு அறிவிப்புக்களை வழங்கும் நடவடிக்கைகளை ரணவிரு சேவா அதிகார சபை மேற்கொள்ளவுள்ளது.

அட்டை உரிமையாளர்களுக்கு தங்கு தடையின்றி வசதிகளை வழங்கும் வகையில் விருசர அட்டைகளின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்படும் என பாதுகாப்புச் சேவைகளுக்கான மேலதிக செயலாளர் சமந்தி வீரசிங்க தெரிவித்தார்.

போரின் போது உயிரிழந்த படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் காணாமல்போன போர்வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படை வீரர்கள் ஆகியோருக்கு 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற இத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் இவ் வரப்பிரசாத அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன.

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பணியாற்றிய மற்றும் தற்போது சேவையில் உள்ள முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அதே காலகட்டத்தில் பாதுகாப்பு படையில் கடமையாற்றிய வேளையில் உயிரிழந்த, அங்கவீனமுற்ற சிவில் ஊழியர்களின் குடும்பங்களும் முந்தைய கட்டங்களில் விருசர  அட்டைகளைப் பெற்றிருந்தனர்.

இந்த கலந்துரையாடலில் பாதுகாப்புச் சேவைகளுக்கான மேலதிக செயலாளர் சமந்தி வீரசிங்க, ரணவிரு சேவா அதிகார சபையின் பணிப்பாளர்  பிரிகேடியர் (ஒய்வு) விஜித் சுபசிங்க, முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளின் நலன்புரி பணிப்பாளர்கள், அரச தனியார் துறை பிரதிநிதிகள் உட்பட ரணவிரு சேவா அதிகார சபை ஊழியர்கள்  பலர் கலந்துகொண்டனர்.