கொவிட்-19 வைரஸை எதிர்கொள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைச்சுகள் தயார்நிலையில்

மார்ச் 11, 2020
  • தனிமைப்படுத்தப்படும் செயல்முறைக்கு உடன்படாமை  தண்டனைக்குரிய குற்றமாகும்
  • கொவிட்-19 வைரஸ் தொடர்பாக வீணாக அச்சம் கொள்ளத்தேவையில்லை
  • ஊடகங்கள் பொறுப்புடன் அறிக்கைகளை வழங்குமாறு வேண்டப்படுகின்றனர்
  • கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானாலும் அல்லது இல்லாவிட்டாலும் வெளிநாடுகளில் இருந்து தமது தாய் நாட்டுக்கு வரும் உரிமை காணப்படுவதாக தெரிவிப்பு

பாதுகாப்பு அமைச்சு சுகாதார அமைச்சுடன் இணைந்து கொவிட்-19 என பெயரிடப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களையும் மற்றும் நாட்டின் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களையும் கொரோனா வைரஸ்  பரவுவதிலிருந்து  தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்  மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை இராணுவத்தின் பராமரிப்பின் கீழுள்ள பூனானை மற்றும் கண்டக்காடு ஆகிய இரு இடங்களும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு தென்கொரியா, இத்தாலி, மற்றும் கொவிட்-19 கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான எனையா நாடுகளிலிருந்தும் வருபவர்கள் இங்கு 14 நாட்கள்    தங்கவைக்கப்படுகின்றனர்.

இதேவேளை, இத்தாலி, தென்கொரியா, மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இங்கு வருகை தந்த பயணிகள்  14 நாட்கள் தனிமைப்படுத்தும் வகையில் இலங்கை இராணுவ பராமரிப்பிலுள்ள பூனானை மற்றும் கண்டக்காடு ஆகிய இவ் இரு இடங்களுக்கும் நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.   

கொவிட்-19 கொரோனா வைரஸ் 'ஆபத்தான' பகுதிகளாக பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களை கிழக்கு மாகாணத்திலுள்ள இவ் இரு இடங்களிலும் தனிமைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த பிரதேசங்கள் சனத்தொகை குறைந்த பகுதியாகவும் 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பதற்கு பொருத்தமான இடமாகவும் காணப்படுகின்றன்மை குறிப்பிடத்தக்கது.   

தியத்தலாவை இராணுவ வைத்தியசாலையில் அனைத்து வசதிகளுடனும் முதலாவது தனிமைப்படுத்தும் வசதி மேற்கொள்ளப்பட்ட தைப்போல் இங்கும் தனிமைப்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் இராணுவம் வழங்கியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.   

தியத்தலாவையில் ஏற்கனேவே தனிமைப்படுத்தும் செயற்பாடுகளில் அனுபவத்தை பெற்றுக்கொண்ட சமூக மருத்துவ ஆலோசகரும் இராணுவ வைத்தியசாலையின் மன நல சேவைகளின் மற்றும் தடுப்பு மருந்தக பிரதிப்பணிப்பாளருமான வைத்தியர் கேணல் சவீன் செமகே இவ்விரு நிலையங்களுக்கும் பொறுப்பாளராக செயற்படுவதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.  

அண்மைய சமூக வலைத்தளங்களில் இடப்பட்டிருந்த பதிவுகளை சுட்டிக்காட்டிய அவர் இலங்கை இராணுவம் சிறப்பாக முன்னெடுத்து வரும் இத்தனிமைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு இவ்வாறான பாதிவுகள் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மக்களுக்கு கொவிட்-19 கொரோனா வைரஸ் தொடர்பாக உண்மையான தகவல்களை வழங்குவதில் பொறுப்புடன் செயட்படுமாரும் ஊடகங்களை கேட்டுக்கொண்டார்.

வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டுக்கு வருபவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானாலும் அல்லது இல்லாவிட்டாலும் அவர்கள் தமது தாய் நாட்டுக்கு வரும் உரிமை காணப்படும் அதேவேளை, அவர்கள் இவ்வாறான வைரஸ்களில் இருந்து விடுவிக்கப்பட தனிமைப்படுத்தப்படும் செயற்பாடுகளுக்கு விருப்பத்துடன் முன்வந்து நாட்டிலுள்ள ஏனைய மக்களையும் பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவது அவர்களின் பொறுப்பாக காணப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
 
1897 ஆம் ஆண்டின் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்களைத் தடுப்பதற்கான 3 ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தின் கீழ் கொவிட்–19 வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து தாய்நாடு திரும்புவவர்களை தனிமைப்படுத்துவதன் சட்டபூர்வமான தன்மையினை பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய செனரத்ன தெளிவுபடுத்தினார்.

இராணுவத்தினாரால் முன்னெடுக்கப்படும் தனிமைப்படுத்தும் செயற்பாடுகள் சட்டபூர்வமானது எனவும் இச்செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்களுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை மற்றும்  2,000 ரூபாய் முதல் 10, 000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சில இடங்களில் தனிமைப்படுத்தும் செயட்படுகளுக்கு பொதுமக்களின்   எதிர்ப்பை அவதானித்ததாக தெரிவித்த அவர், இக்கொடிய வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஊடகங்கள்  மற்றும் பொதுமக்களை   கேட்டுக்கொண்டார்.

கொவிட்–19 வைரஸை எதிர்கொள்ளவதற்கு சமூகத்தின் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்குமான வசதிகளை உறுதிப்படுத்திய பிரிகேடியர் விக்ரமசிங்க இவ்விரு நிலையங்களிலும் சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படுவதுடன், விஷேட கழிவறைகள், சுகாதார பொருட்கள், ஆடைகள், உணவு மற்றும் வை - பை  வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.