கொவிட்-19 காரணமாக விமான நிலையங்களை மூடுவது குறித்த வதந்திகளை விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவன தலைவர் மறுப்பு

மார்ச் 16, 2020
  •     கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் பயணிகளை கண்டறிய விமான நிலையங்களில் கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு
  •   தாம் வசிக்கும் சொந்த இடம் அல்லது விஜயம் மேற்கொள்ளும்  இடத்தை மறைத்தே ஏமாற்றியோ செல்ல வாய்ப்பில்லை .

கொவிட்-19 வைரஸ் காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மூடும் திட்டங்கள் குறித்த வதந்திகளை விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவனம் இன்று  மறுத்துள்ளது.

இதேவேளை, "யாழ்ப்பாணம் தவிர ஏனைய சர்வதேச விமான நிலையங்கள் வழமைபோல் இயங்கும்" என்பதாக விமானப்போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

அனைத்து விமான நிலைய போக்குவரத்து சேவை நடவடிக்கைகளும் வழமைபோல் இயங்கும் எனவும், மக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதாகவும் தெரிவித்த அவர், மக்களைத் திசைதிருப்பும் வகையில் சில சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பரப்பி, சமூகத்தில் பதற்றத்தையும் குழப்ப சூழ்நிலையையும்  ஏற்படுத்த சிலர் செயற்படுவதை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.