தனிமைப்படுத்தலுக்கு உட்படாத இலங்கை பயணிகள் உடனடியாக பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை

மார்ச் 17, 2020

* இத்தாலி மற்றும் கொரியாவில் இருந்து வருகை தந்த  170 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படவில்லை
* பொலிஸ் நிலையங்களில்  பதிவு செய்யாத பயணிகள்  மீது சட்ட நடவடிக்கை

இங்கிலாந்து, ஈரான், இத்தாலி, தென் கொரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்து மார்ச் 1ம் திகதி  முதல் 15ம் திகதி  வரை இலங்கைக்கு வருகை வந்த அனைத்து இலங்கையர்களும் தங்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு அல்லது அவ்வாறன நபர்கள் தொடர்பாக பொலிசாருக்கு  உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களை கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்தும் வைரஸ் பரவுவதில் இருந்தும்   தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவினால் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து தாயகம்  திரும்பிய 170 க்கும் மேற்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு உள்ளாகாமல் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர், கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,  அவர்களை நாம் கண்காணிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும், ”என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

மேலும்,14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு உட்படுத்தப்படாதவர்கள் 119 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு  அழைப்பினை ஏற்படுத்தி  தமது  விவரங்களை பொலிஸ் நிலையங்களுக்கு   தெரிவிப்பது அவசியமாகும்.

'கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலைத் தவிர்ப்பதற்காக மறைந்திருந்த பயணிகள்,  பொருத்தமான தகவல்களை அளிக்குமாறும்  அவ்வாறு தகவல்  அளிக்கப்படும் போதே அந்தந்த பகுதிகளில் உள்ள   தங்களது சொந்த வீடுகளில் தங்கியிருந்து தனிமைப்படுத்தப்படுவதற்கான   அறிவுறுத்தல்கள்  பொலிஸ்  மற்றும் இலங்கை இராணுவத்தினரால்  வழங்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

'அவர்கள் தனிமைப்படுத்தப்படும் மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள், ஆனால் பொது சுகாதார உத்தியோகத்தர்களின் உதவியுடன் தங்கள் சொந்த வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் எனவும் அவர் உறுதியளித்தார்.

இவ்வாறான சந்தர்ப்பமளிக்கப்படும் வேளையிலும்  அவர்கள் இக் கோரிக்கையை நிறைவேற்ற  தவறினால், தனிமைப்படுத்தப் பாடல் மற்றும் நோய்களைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தின் கீழ்  அவர்களுக்கு எதிராக பொலிசாரினால்  சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.