ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பதவியேற்பு நிகழ்வின் நான்கு ஆண்டு பூர்த்தி இன்று
ஜனவரி 09, 2019நான்கு வருட கால அனுபவங்களுடன் மக்கள் நேய செயற்திட்டங்கள் வெற்றியை நோக்கி முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு
ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி பல்வேறு சமய நிகழ்வுகள்
அமரர் பண்டாரநாயக்கவின் உருவச் சிலைக்கு ஜனாதிபதி மலரஞ்சலி
லக்கல புதிய பசுமை நகரம் மக்களிடம் கையளிப்பு
தும்பர பள்ளத்தாக்கை வளமாக்கும் களுகங்கை நீர்த்தேக்கம் மக்களிடம் கையளிப்பு
இன்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் தன்னை இந்த நாட்டின் அரச தலைவனாக தேர்ந்தெடுத்த மக்கள், தன்மீது கொண்ட எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் வெற்றியடைந்துள்ளதைப் போலவே சில வேலைத்திட்டங்கள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன என்றும், அதனூடாக பெற்றுக்கொண்ட வெற்றிகளை மேலும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதை போன்றே தோல்விகளை வெற்றியை நோக்கி வழி நடத்த வருங்காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
லக்கல புதிய பசுமை நகரத்தை இன்று (08) முற்பகல் மக்களிடம் கையளித்ததன் பின்னர் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்களின் ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்து சகல இன மக்களும் அச்சமும் சந்தேகமுமின்றி வாழக்கூடிய சூழலைக் கட்டியெழுப்பவும் ஊடக சுதந்திரம், நீதிமன்றத்தின் சுயாதீன தன்மை, பக்கச்சார்பற்ற அரச சேவை ஆகியவற்றை கட்டியெழுப்பவும் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தவும் கடந்த நான்கு வருட காலத்தில் பல முக்கியமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதை ஜனாதிபதி அவர்கள் இதன்போது நினைவுகூர்ந்தார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முக்கிய சவாலாக காணப்படும் இலஞ்சம், ஊழல், மோசடி ஆகியவற்றை இல்லாதொழிப்பதற்கு கடந்த நான்கு வருடகாலத்தில் சிறப்பான அர்ப்பணிப்பை செய்ததோடு, அதனூடாக பெற்றுக்கொண்ட அனுபவங்களை ஆசீர்வாதமாக கருதி ஊழல், மோசடியை இல்லாது ஒழிப்பதற்கான வலுவான வேலைத்திட்டத்துடன் கைகோர்த்துக்கொள்ள ஜனாதிபதி அவர்கள் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், கட்சி வேறுபாடுகளுடன் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுபவர்களன்றி பொதுவான நிகழ்ச்சி நிரலுக்கமைய நாட்டின் நலன்கருதி சிந்தித்து செயலாற்றுபவர்களே தற்போது நாட்டுக்கு அவசியமாகும் எனவும் புதிய எண்ணங்களோடு, புதிதாக திட்டமிட்டு, புதிய பயணம் ஒன்றினை மேற்கொள்ள பிறந்துள்ள இந்த புத்தாண்டில் அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அவர்கள் இதன்போது கேட்டுக்கொண்டார்.
ரஜரட்ட மக்களின் நீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக மொரகஹகந்த – களுகங்கை பாரிய நீர்ப்பாசனத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதைப் போன்று வடக்கு மக்களின் நீர்ப் பிரச்சினைக்கும் உரிய தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்கும் தினத்திலேயே தன்னால் உண்மையான மகிழ்ச்சியை உணர முடியுமென ஜனாதிபதி அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.
சுதந்திரம், ஜனநாயகம், பொருளாதார சுபீட்சம் மற்றும் மக்கள் அச்சமும் சந்தேகமுமின்றி வாழக்கூடிய சூழலைக் கட்டியெழுப்புவதற்கான விரிவான செயற்பணிகளை நிறைவேற்றும் அதேவேளை, இனங்களுக்கிடையே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி, அமைதியானதொரு தேசத்தையும் பேண்தகு அபிவிருத்தியையும் கட்டியெழுப்பும் நோக்குடன் 2015 ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டின் 62 இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாக்குகளின் மூலம் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டு இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
அதனை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களுக்கு ஆசி வேண்டி பல்வேறு இடங்களில் சமய கிரியைகள் இடம்பெற்றதுடன், நேற்றிரவு ஜனாதிபதி அலுவலகத்தில் பிரித் பாராயணமும் இடம்பெற்றது.
இன்று முற்பகல் மகா சங்கத்தினருக்கான அன்னதான நிகழ்வொன்றும் இடம்பெற்றது.
இதேநேரம் இன்று காலை ஜனாதிபதி அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்களின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி தனது பணிகளை ஆரம்பித்தார். காலஞ்சென்ற பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 120ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலிலுள்ள பண்டாரநாயக்க அவர்களின் உருவச்சிலைக்கு அருகில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து “மைத்ரி ஆட்சி – பேண்தகு யுகம்” பொருளாதார, கலாசார மறுமலர்ச்சியின் ஐந்தாண்டு பிரவேசத்தை முன்னிட்டு மொரகஹகந்த – களுகங்கை திட்டத்தினால் நீரில் மூழ்கிய லக்கல நகரத்திற்கு பதிலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள லக்கல புதிய பசுமை நகரத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்துடன் தொடர்புபடும் அடுத்த பாரிய நீர்த்தேக்கமான களுகங்கை நீர்த்தேக்கத்தையும் ஜனாதிபதி அவர்கள் மக்களிடம் கையளித்தார்.
நவீன வசதிகளுடன் கூடிய புதிய லக்கல நகரமானது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ரஜட்ட மக்களுக்காக கண்ட கனவினை நனவாக்கி நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் இந்த நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் மற்றுமொரு பெறுபேறாக அம்மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
மொரகஹகந்த – களுகங்கை திட்டத்தின் மூலம் இடம்பெயர்ந்த 3.000 குடும்பங்களின் தேவைகளை நிறைவேற்றி களுகங்கை நீர்த்தேக்கத்தினால் நீரில் மூழ்கிய லக்கல நகரத்திற்கு பதிலாக களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்திற்கு அண்மித்ததாக புதிய லக்கல நகரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எதிர்கால தேவைகளை கருத்திற்கொண்டு புதிய நகர எண்ணக்கருவான பூங்கா நகர எண்ணக்கருவிற்கு அமைய இந்த நகரம் திட்டமிடப்பட்டுள்ளதுடன் இதற்காக மொத்தமாக 4,500 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.
லக்கல புதிய நகரத்தில் 26 அரச நிறுவனங்களுக்கான கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு சேவையை வழங்கும் அந்த அனைத்து நிறுவனங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள லக்கல புதிய பிரதேச வைத்தியசாலையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் பல்லேகம மத்திய மகா வித்தியாலயத்தின் நிர்வாக கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வும் ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும் புதிய நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், பிரதேச செயலாளர் அலுவலகம், பொலிஸ் நிலையம், விளையாட்டு மைதானம், சந்தை, பஸ் தரிப்பிடம், தபால் அலுவலகம், சுகாதார மத்திய நிலையம், நெடுஞ்சாலைகள் முறைமை உள்ளிட்ட அரச சேவைகள் மற்றும் மக்கள் உட்கட்டமைப்பு வசதிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகள் அமைச்சர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அமைச்சர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடையும் இன்றைய தினத்தில் மக்கள் மயப்படுத்தப்பட்டிருப்பது, மக்கள் நலன் பேணலை கருத்திற்கொண்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நான்கு வருடங்களாக முன்னெடுத்த அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களின் மற்றுமொரு உன்னத பெறுபேறுகளேயாகும்.
நன்றி: pmdnews.lk