திடீர் விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை வேறு நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
ஜனவரி 10, 2019திடீர் விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை வேறு நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.
சுகாதாரம், போஷனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கும் இலங்கை விமானப் படைக்குமிடையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் சுகாதாரம், போஷனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் திருமதி வசந்தா பெரேரா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
சிறுநீரக நோய்க்கான இறுதிச் சிகிச்சையாக தற்போது கண்டறியப்பட்டிருப்பது சிறுநீரக மாற்று சிகிச்சையும் இரத்த சுத்திகரிப்புமாகும். எனினும் பொருத்தமான மாற்று சிறுநீரகத்தை கண்டறிவது மிகவும் கடினமானதாகும். தற்போது குடும்பத்தில் உள்ள எவரேனும் ஒருவரது சிறுநீரகத்தை அல்லது நன்கொடை அளிக்கும் ஒருவரிடமிருந்து சிறுநீரகத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையே காணப்படுகின்றது. இதனால் சிறுநீரக மாற்று சிகிச்சையை வெகு சிலருக்கே மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது.
இதன் காரணமாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் மூலம் சுகாதாரம், போஷனை சுதேச மருத்துவ அமைச்சுடன் இணைந்து திடீர் விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகத்தை சிறுநீரக நோயாளிகளுக்கு பொருத்தும் திட்டமொன்றை கண்டி பொது வைத்தியசாலையுடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூளைச் சாவுற்ற நோயாளிகளின் சிறுநீரகங்களை பொருத்துவதன் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் தற்போது சிறுநீரகம், இதயம், ஈரல், கல்லீரல், கண் உள்ளிட்ட உடற் பாகங்களை பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு திடீர் விபத்துக்களின் காரணமாக ஐந்து, ஆறு பேர் உயிரிழப்பதுடன், உயிரிழந்தவர்களின் ஆரோக்கியமான உடல் உறுப்புக்கள் இவ்வாறு நோயாளிகளுக்கு பொருத்தும் திட்டம் இதன்கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
திடீர் விபத்துக்களின் போது உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புக்களை குறுகிய காலத்திற்கே உயிர்த் தன்மையுடன் வைத்திருக்க முடியுமென்ற காரணத்தினால் மிக விரைவாக மாற்று சத்திர சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதால் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலையீட்டினால் இந்த உறுப்புக்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு விமானப் படையினரின் உதவியைப் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. தற்போது இதற்காக செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகள் ஜனாதிபதி அவர்களினால் தாபிக்கப்பட்டுள்ள தேசிய சிறுநீரக நிதியத்தின் மூலம் மேற்கொள்ளப்படுவதுடன், இத்திட்டத்தை எதிர்காலத்தில் வினைத்திறனாக முன்னெடுப்பதற்காக சுகாதாரம், போஷனை, சுதேச மருத்துவ அமைச்சிற்கும் இலங்கை விமானப் படைக்குமிடையில் இந்த புதிய புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இதேநேரம் சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலில் தற்போது உடல் உள் உறுப்புக்களை அன்பளிப்பு செய்வதற்கு தெரிவிக்கப்பட்டுள்ள விருப்பங்களை, சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டையில் உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் உறுப்புக்களை அன்பளிப்பு செய்யும் இந்த நற்பணிக்கு பங்களிப்பு செய்பவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு அரசாங்கத்தின் அனுசரணையை பெற்றுக்கொடுத்து அவர்களினால் மேற்கொள்ளப்படும் உன்னத பணியை பாராட்டுவதற்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. திடீர் விபத்தினால் மூளைச் சாவடையும் போது அல்லது உறுப்புக்களை அன்பளிப்பு செய்வதற்கு விருப்பத்தை தெரிவிப்பதற்கு 081-2226522 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் கண்டி பொது வைத்தியசாலை உறுப்பு மாற்று சிகிச்சை ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கு விருப்பத்தை தெரிவிப்பதன் மூலம் இதற்கு பங்களிக்க முடியுமென்றும் சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
அமைச்சர் ராஜித சேனாரத்ன, இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நன்றி: pmdnews.lk